செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ ஆண்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் ஊதியத்தில் ‘தயார்நிலைத் தலைவர்’ எனும் புதிய பணியிடத்தை அறிவித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய சைபர் தாக்குதல்கள், உயிரியல் ரீதியான ஆபத்துகள் மற்றும் எதிர்பாராத பேரழிவுகளை முன்கூட்டியே கணித்துத் தடுப்பதே இந்த அதிகாரியின் முக்கியப் பணியாகும்.

இவ்வளவு பெரிய சம்பளம் வழங்கப்பட்டாலும், இந்த வேலை மிகவும் அழுத்தமானது என்றும், ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சாம் ஆல்ட்மேன், மனித குலத்திற்கு ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய விபரீதங்களைச் சமாளிக்கும் அதீத திறன் கொண்ட ஒருவரைத் தாங்கள் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னுதாரணங்கள் இல்லாத சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், இந்தப் பணியில் சேருபவர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், அதன் பாதுகாப்பு குறித்த கவலைகளும் சவால்களும் அதிகரித்து வருவதையே இந்த முயற்சி காட்டுகிறது.