உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள் முறையில் அமைந்துள்ள நிலையில் நாள்தோறும் விளக்கேற்றி பொதுமக்கள் வழிபாடு செய்கின்றனர்.
இந்த கோயிலை சுற்றிலும் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.75 ஏக்கர் நிலம் இருந்தும் பல லட்சம் மதிப்பிலான நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகையால் அந்த நிலத்தை மீட்க வேண்டும் என உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் சென்ற மாதம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் கோவிலை மீட்டு ஆய்வு நடத்தி கோவிலின் வரலாற்றை முழுமையாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இந்து சமய அறநிலையத்துறை தாமாகவே முன்வந்து மூன்று கால பூஜை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள்.