தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகி, நடப்பு ஆண்டில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார். இது மாநிலத்தில் நிலவும் சுகாதார மற்றும் சட்ட ஒழுங்கு நிலையை பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:  “நாட்டிலேயே நாய்க்கடியில் தமிழகமே முதலிடத்தில் இருப்பது ஆளும் திமுக அரசின் செயலிழந்த நிர்வாகத்தை எடுத்துக்காட்டுகிறது. தெருநாய்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாமல் இருக்கிறார்கள். நாய்கள் இனப்பெருக்கக் கொள்கை போன்று கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எங்கு போனது என்பது கேள்விக்குறியாக உள்ளது.”

மேலும், அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி எங்கும் கிடைக்கிறதா?, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்திலிருந்து தெருநாய்கள் தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து விடப்படுவதாகவும், அதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் செயல்பாடுகளில் தன்வரவு இல்லாததைக் கண்டித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பாஜக மாநிலமெங்கும் போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.