டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் பயணிகளிடம் அத்துமீறி நிதி வசூலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை, பெண் பயணி ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம் நோக்கிச் சென்ற மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயிலில், தேசிய நிவாரண முகாம் எனக் கூறி பயணிகளிடம் அந்த இருவரும் பணம் கேட்டுள்ளனர்.

 

இதனைப் பார்த்த பெண் பயணி ஒருவர், மெட்ரோ ரயிலுக்குள் இது போன்று நிதி திரட்டுவது சட்டவிரோதமானது என்று கூறி அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன், அதற்கான முறையான அனுமதி கடிதம் அல்லது அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு வலியுறுத்தினார். அந்த இருவரும் எவ்வித அடையாள அட்டையையும் காண்பிக்க முடியாமல் திணறியதோடு, அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் இத்தகைய செயல்களைத் தடை செய்துள்ள நிலையிலும், அனுமதியின்றிப் பணம் வசூலிக்கும் இத்தகைய நபர்கள் குறித்துப் பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.