லார்சென் & டூர்போ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என். சுப்ரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்கள் பணியாற்றுவது குறித்து தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். அந்தக் கருத்து தற்செயலாக, திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“ஐந்து அல்லது ஆறு முக்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து என்னை நேரடியாக அணுகி, மின்னஞ்சல் அனுப்பி, தொலைபேசியில் பேசினர். ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலைகள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
இது எனக்கும், நிறுவனத்திற்கும் நல்ல பெயரைத் தரவில்லை,” என்று அவர் MoneyControl-இடம் கூறினார். மேலும், ஒரு நபர் கேள்வி கேட்டபோது, தான் இயல்பாகவே பதிலளித்ததாகவும், ஆனால் அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் விளக்கினார்.
“பதிவு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை இருந்தபோதும், அது பதிவு செய்யப்பட்டது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, வேறு விதமாக பதிலளித்திருக்கலாம். என் மனைவியின் பெயரும் இதில் இழுக்கப்பட்டது குறித்து எனக்கு வருத்தமாக உள்ளது,” என்றார்.
இந்த சம்பவம் தன்னை மனதளவில் பாதித்ததாக சுப்ரமணியன் ஒப்புக்கொண்டார். “இது எனக்கு எளிதாக இல்லை. இந்த விஷயம் என் மனதை உறுத்தியது. ஆனால், நடந்தது நடந்துவிட்டது, இப்போது அதை திரும்பப் பெற முடியாது. இதேபோன்ற சூழலில் மீண்டும் இப்படி ஒரு கேள்வி வந்தால், வேறுவிதமாக பதிலளிப்பேன். அப்போது நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருந்தது. செயல்பாடு தான் எங்களுக்கு ஆக்ஸிஜன். அது தவறாகும்போது, இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிவருகின்றன,” என்று அவர் கூறினார்.
