காசியாபாத்தில் 25 வயது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பணி முடிந்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரிச்சா சச்சன், திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் தனது வாடகை வீட்டிற்கு புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் திடீரென நாய் ஒன்று முன்பு வந்ததால், அதை தவிர்க்க முயன்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சர்வோதயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களை அகற்றி, அவற்றை புனர்வாழ்வு மையங்களில் வைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 11 ஆணையைத் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தெருநாய்களால் ஏற்படும் விபத்துகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

சாலை சந்திப்புகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தெருநாய்கள் கூட்டமாக சுற்றுவது, மற்றும் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களும், பயணிகளும் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். கடந்த 2023-ல் காவல் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சியை முடித்து பணியில் சேர்ந்த ரிச்சா, உத்தரபிரதேசத்தின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவரது கடின உழைப்பையும், சக ஊழியர்களிடையே அவருக்கு இருந்த நற்பெயரையும் காவிநகர் ஏசிபி ஸ்வதந்திர குமார் சிங் புகழ்ந்தார். உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு, அவரது உடல் மாநில மரியாதையுடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து உடன்பிறப்புகளில் இளையவரான ரிச்சா, சிறுவயதிலிருந்தே காவல்துறையில் சேர வேண்டும் என்ற கனவு கொண்டிருந்ததாக அவரது சகோதரர் விகாஸ் கண்ணீருடன் தெரிவித்தார்.