மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயது ஆண் ஊழியர் ஒருவர், தனது பெண் மேலதிகாரி தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாகக் கூறி சமூக வலைதளப் பிரிவான ரெடிட்டில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த ஊழியர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

தனது பதிவில், “எனது பெண் மேலதிகாரி கோப்புகளில் கையெழுத்திடும் போதெல்லாம் என்னைத் தொடர்ந்து தொடுகிறார். ஆரம்பத்தில் அதைத் தவறுதலாக நடந்தது என்று நினைத்தேன், ஆனால் இப்போது அது அடிக்கடி நடக்கிறது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த மேலதிகாரி நெருக்கமாக அமர்ந்து தன்னைத் தூண்ட முயற்சிக்கிறார் என்றும், அவரது உடல் பாகங்களைத் தொட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டு ஜோக்குகள் சொல்வதாகவும் அந்தப் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தப் பெண் அதிகாரி திருமணமானவர் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். மேலும், ஆறு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், வேலையை மாற்றவும் முடியாமல், சக ஊழியர்களிடம் துறை மாறுதல் குறித்துக் கேட்டபோது, மேலதிகாரிகள் வாழ்வைப் பிசாசு ஆக்கிவிடுவார்கள் என்று கூறி ஆதரிக்க மறுத்ததாகவும் அந்த ஊழியர் குறை கூறினார். இந்தத் தொல்லைகளால் தனது வாழ்க்கை நரகமாகிவிட்டதாகக் கூறி, யாரிடம் புகார் செய்வது என்று அந்த இளைஞர் ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் பணியிடங்களில் பாலியல் தொந்தரவு குறித்துப் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. ஒரு பயனர், “98 சதவீத மக்கள் நீங்கள் ஆண் என்பதால் பொய் சொல்வதாகவே நினைப்பார்கள்” என்று கருத்து தெரிவித்த நிலையில், மற்றவர்கள் “வேலையை விட்டுவிடுங்கள்” அல்லது “அவரது செயல்களுக்கு எதிர்வினை காட்டாதீர்கள்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் ‘பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுச் சட்டம், 2013’ அமலில் இருந்தாலும், ஆண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படும்போது சட்டப்பூர்வ ஆதரவு குறைவாகவே இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.