தூத்துக்குடியில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி, வாகன உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவருக்கு, அக்டோபர் 3 அதிகாலை 4:13 மணிக்கு வந்த எஸ்எம்எஸ்-இல், “உங்களது வாகனம்  வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80 வசூலிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது கார் அன்று காலை முழுவதும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால், இந்த கட்டண வசூல் எப்படி நடந்தது என்பது குறித்து கைலாசம் குழப்பத்தில் உள்ளார்.

இதுகுறித்து கைலாசம் மேலும் கூறுகையில், “எனது கார் வீட்டில் இருந்தபோது, டோல் கேட்டில் கடந்ததாக எப்படி கட்டணம் விதிக்கப்பட்டது என்று புரியவில்லை. இதைப் பற்றி விசாரிக்க டோல் பிளாசாவுக்கு தொடர்பு கொண்டேன், ஆனால் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை,” என்றார்.

இந்த மர்மமான சம்பவம் குறித்து தெளிவு பெறுவதற்காக, அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள், டோல் கட்டண வசூல் முறையில் உள்ள குறைபாடுகளையும், தொழில்நுட்ப பிழைகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது, மேலும் இது குறித்து உரிய விசாரணை தேவை என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.