பணவீக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), செல்வமகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), மகிலா சம்மான் யோஜனா மற்றும் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருப்பின், இச்செய்தி உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குரிய விதிகளை அரசு மாற்றி உள்ளது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் இத்திட்டங்கள் அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு பான் மற்றும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இந்த மாற்றங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்திற்கு கெஒய்சி (KYC) ஆக பயன்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆதார் எண் இல்லாமலும் இந்த சேமிப்பு திட்டங்களில் டெபாசிட் செய்யலாம் எனும் நிலை இருந்தது.

முதலீட்டாளர்கள் எவ்விதமான முதலீடு செய்வதற்கு முன்னரும் ஆதார்பதிவு எண்ணை சமர்ப்பிக்கவேண்டும் என நிதியமைச்சகம் சார்பாக  கூறப்பட்டு உள்ளது. அதோடு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீடு செய்வதற்கு பான்கார்டு காட்டப்பட வேண்டும். சில தினங்களுக்கு முன் செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. சேமிப்பு திட்டத்தில் வட்டிவிகித மாற்றம் பற்றிய தகவலை அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகிய திட்டங்களுக்கு இப்போது அதிக வட்டி கிடைக்கும்” என கூறினார்.