கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தியாளர் கதிரவன் மற்றும் அவரது குழுவினர் மீது எம்.எல்.ஏ பழனியாண்டி நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் செய்தியாளர்கள் மீதே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே அவமானம் என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி சம்பவ இடத்தில் இருந்ததைக் குறிப்பிடாமல் அவரை மறைக்க முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கிரிமினல்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் பதவி கொடுத்துப் பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அராஜக செயலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
