டாஸ்மாக் கடைகளில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் துறையில் மிக விரைவில் அதிரடி மாற்றங்கள் வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் தனிமனித கணக்கிற்குச் செல்வதாகவும், அங்கு ஊழல் அதிகமாக உள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது முற்றிலும் தவறு என்றும், எம்.ஆர்.பி (MRP) விலைக்கு மேல் 1 ரூபாய் கூட கூடுதலாக வாங்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும், இரவு 10 மணிக்கு மேல் எந்தவொரு டாஸ்மாக் கடையும் இயங்கக் கூடாது என்றும், இந்த விதிகளையும் உத்தரவுகளையும் மீறிச் செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
