எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் திமுகவினர் காங்கிரஸ் மீது முன்வைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி எந்தவொரு காலகட்டத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் களத்தில் நின்று ரத்தம் சிந்தி உழைத்தார்கள் என்றும், அதேபோல் 2026 தேர்தலிலும் மதச்சார்பற்ற கொள்கையைக் காக்கவே உழைத்தோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக கொள்ளைப்புற வழியாகப் பாசிச அரசையோ அல்லது கவர்னர் ஆட்சியையோ கொண்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மதச்சார்பின்மை கொள்கையைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய புதிய முதல்வர் விஜய்யின் தவெக அரசுடன் கூட்டணி அமைத்து அங்கம் வகிக்கிறோம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தங்களைக் குறித்துப் பரப்பப்படும் அற்பமான மற்றும் மிரட்டல் வார்த்தைகளைப் பற்றித் தங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்று கூறியுள்ள அவர், “வெள்ளைக்காரனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கே பயப்படாத பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்க, இதையெல்லாம் துச்சமாகத்தான் நினைப்போம்” என்று மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
