கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இளங்கோ ஏற்றுமதி ஆலோசகராக இருக்கிறார். மேலும் இளங்கோ வணிக நோக்கத்திற்காக தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு கூட்டமைப்பில் பதிவு செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் டாக்டர் மெலிசா கிப்சன் என்பவர் வாட்ஸ் அப் மூலம் இளங்கோவை தொடர்பு கொண்டு, தான் அமெரிக்க ஆராய்ச்சி டாக்டர் எனவும், புற்று நோய்க்கு மருந்து தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களை வாங்கி தந்தால் கமிஷன் தொகை தருவதாகவும் தெரிவித்தார்.

இதனை நம்பி இளங்கோ இணையதளம் மூலம் அவர் கூறிய மூலப்பொருட்களை வாங்கி அனுப்பி வைத்தார். முதல் முறை மட்டும் அவருக்கு கமிஷன் தொகை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மூலப்பொருட்கள் வாங்க டாக்டர் கூறிய இணையதளத்திற்கு இளங்கோ 1 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அவருக்கு கமிஷன் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.