செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், திராவிட முன்னேற்ற கழகத்தின் தேவை தமிழ்நாட்டோடு முடிந்து விடவில்லை. அது இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது என்பதை முதலமைச்சர் இன்றைக்கு தனது செயல் மூலம் நிரூபித்திருக்கிறார்.  ஆகவே அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை காட்டிலும் அதிகமான வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழக அணி சார்பில் களத்தில் நிற்கின்ற அனைவரும் வாகை சூடுவார்கள்.

இந்தியாவில் யார் பிரதமர் என்பதைவிட, யார் பிரதமராக கூடாது என்பது முக்கியம். அந்த முயற்சியில் அண்ணன் ஸ்டாலின் இறங்கி இருக்கிறார். இந்த ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு பதிவு செய்கிறேன். நிலவில் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிறங்கி விட்டது. உலகம் இன்றைக்கு இந்தியாவை அண்ணாந்து பார்க்கின்றது. அதற்கு பின்னால் ஒரு தமிழன் வீர முத்துவேல் இருக்கிறார். அவர்தான் ப்ராஜெக்ட் இன்ஜினியர்.

அவருக்கு முன்னால் வனிதா என்ற ஒரு பெண்மணி இருந்தார். அவருக்கு முன்னால் மயில்சாமி அண்ணாதுரை என்பவர் இருந்தார். இஸ்ரோவை இந்த நாட்டில் இயக்கியது மட்டுமல்ல,  அதற்கு முகம் தந்தது ஏபிஜே அப்துல் கலாம் என்ற தமிழர். ஆனால் உலகமே இன்றைக்கு இந்தியாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற போது…  தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு அந்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த நாடாளும் பிரதமர் ஹிந்தியில் பேசினார்.

ஆங்கிலத்தில் தான் அவர் பேசியிருக்க வேண்டும். உலகம் முழுவதும் அதை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்ற போது….  இந்தியில் பேசி,  தான் ஒரு இந்தி வெறியன் என்பதை நாடாலும் பிரதமர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். இதை நாங்கள் ஏற்க முடியாது. ஹிந்திக்கு எதிராக நாங்கள் தொடங்கி இருக்கின்றபோர்…  அடுத்த கட்டத்திற்கு அதைக் கொண்டு செல்ல வேண்டிய அவசரம் தமிழர்களின் தோளில்  திணிக்கப்படுகிறது. போராட்டத்தை தேடி நாங்கள்  போவதில்லை. போராட்டம் எங்களைத் தேடி வந்தால் நாங்கள் அதை விடுவதில்லை என தெரிவித்தார்.