ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியால் சென்னையின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 139 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதல்முறையாக தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் எம்.எஸ் தோனி 9-வது இடத்தில் களமிறங்கினார்.

அவருக்கு தற்போது 42 வயது ஆகும் நிலையில் மூட்டு வலி பிரச்சனை காரணமாக கடந்த வருடத்தில் இருந்தே கடைசி ஓவர்களில் தான் களமிறங்கி வருகிறார். தோனி 9-வது இடத்தில் களமிறங்கிய நிலையில் ‌ஹர்சல் படேல் வீசிய முதல் பந்திலேயே அவர் கோல்டன் டக் அவுட் ஆனார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தோனி 9-வது இடத்தில் களமிறங்கியது குறித்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒருவேளை போட்டியில் தோனி கடைசி இடத்தில் விளையாட விரும்பினால் அதற்கு அவர் பேட்டிங் செய்யாமலே இருக்கலாம். அதற்கு பதில் பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையாக இருக்கும்.

அவருக்கு முன்பு களமிறங்கிய தாகூர் எப்போதும் பெரிய ஷாட்களை அடித்ததில்லை. அப்படி இருக்கும்போது தோனி  இந்த தவறை ஏன்  செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. சென்னை அணியில் தோனி சொல்லாமல் எதுவுமே நடக்காது. எனவே அவரை வேறு யாராவது கட்டாயப்படுத்தி கடைசி இடத்தில் விளையாட சொன்னதாக கூறினால் அதை நான் நிச்சயம் நம்ப மாட்டேன். கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்படும்போது எப்போதும் அசத்தும் தோனி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பின்தங்கியது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. நான் சிஎஸ்கே வெற்றி பெற்றாலும் கூட முன்கூட்டியே தோனியை பேட்டிங் செய்ய அழைப்பேன். மேலும் இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.