கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சரவணகுமார்(37) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணகுமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக சரவணகுமாரின் குடும்பத்தினர் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் ஊராட்சி மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் புகார் அளித்தனர். இதனால் நேற்று முன்தினம் ஊராட்சி பணியாளர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி பார்த்த போது சரவணக்குமார் உடல் அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணக்குமாரின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை குடிநீர் தொட்டியில் போட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சரவணனின் உடல் அழுகிய நிலையில் கிடந்த குடிநீரை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் குடிநீரை பயன்படுத்திய மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.