25 ஆண்டுகளாகப் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆடம் வாட்கின்ஸ் என்பவர், தான் தூங்கிய விதம் சரியில்லை என்று நினைத்த நிலையில், அது உண்மையில் பக்கவாதம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 42 வயதான ஆடம், திடீரெனத் தனது இடது பக்க உடலை அசைக்க முடியாமல் போனதுடன், பேசுவதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது முகம் ஒருபுறம் கோணலாக மாறியதைக் கண்ட அவரது துணைவியார், அவர் மது அருந்தியிருப்பதாக முதலில் தவறாகக் கருதியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தற்காலிகத் தடை ஏற்படும் ‘மினி ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
ஆடம் ஏற்கனவே ரத்த சிவப்பணுக்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் ‘பாலிசைதீமியா’ எனும் ரத்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தொடர்ச்சியான புகைப்பிடிக்கும் பழக்கம் ரத்தத்தை மேலும் கெட்டியாக்கி ஆக்ஸிஜன் விநியோகத்தைக் குறைத்துள்ளது.
இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இந்த ஆபத்தான பாதிப்பு உண்டாகியுள்ளது. சிகரெட்டிற்காக மாதம் சுமார் 24,000 ரூபாய் வரை செலவு செய்து வந்த ஆடம், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அரசின் உதவியுடன் அப்பழக்கத்தைக் கைவிட்டுள்ளார். தற்போது அவரது ரத்த சிவப்பணுக்களின் அளவு சீராகி வருவதோடு, உடல்நலமும் தேறி வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
