கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு பிரத்யேக நீல நிற வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைக்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளதால், இதனை பயன்படுத்தி நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.