கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61). இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி ரெங்கநாயகி(55) அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார். இத்தம்பதியினருக்கு குயில்மொழி, முகிலன் என ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். இதில் முகிலன் அயர்லாந்து நாட்டில் வேலை பார்க்கிறார். அடுத்த மாதம் 10ஆம் தேதி முகிலனுக்கும், சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த நித்ய சுபாசினி என்பவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனிடையே திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் பயன்படும் அடிப்படையில் இருக்க வேண்டும் என ரவீந்திரன் யோசித்து உள்ளார். அதன்படி உலகப் பொதுமறை திருக்குறளை அதன் விளக்க உறையுடனும் மற்றும் ஆண், பெண் குழந்தைகளின் ஒரு லட்சம் தமிழ் பெயர் கொண்ட 2 புத்தகத்துடன் திருமண அழைப்பினை இணைக்க முடிவுசெய்துள்ளார்.
அதன்பின் புத்தகத்தின் முதல் பக்கத்தில் மணமக்கள் பெயர், திருமணம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து திருக்குறள் மற்றும் விளக்கவுரைகளும் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. இந்த புத்தக அழைப்பிதழ் 280 பக்கங்கள் கொண்டிருக்கிறது. மொத்தம் 500 புத்தக திருமணம் அழைப்பிதழை அவர்கள் அச்சிட்டுள்ளனர்.