தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு நிகழாண்டில் 200 நபர்கள் ஆன்மீக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசு ஏற்கும் எனவும் அறிவித்திருந்தார். இந்த பயணத்திற்கான முதல் அணியில் பயணிக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 67 பயனாளிகள் கடந்த 22 -ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராட சாமி தரிசனம் செய்து வாரணாசி விரைவு ரயில் மூலமாக காசிக்கு புறப்பட்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காசி தரிசனம் முடிந்து திரும்பிய பயணிகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பொன்னாடை அணிவித்து வரவேற்று அவர்களிடம் ஆன்மீக பயணம் குறித்து கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, நிகழாண்டு முதற்கட்டமாக 200 பேர் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் மார்ச் 1, மூன்றாவது கட்டம் மார்ச் 8 ஆகிய தேதிகளில் தொடங்க இருக்கிறது. இதற்கு 599 நபர்கள் விண்ணப்பம் செய்திருந்ததில் 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக 2023 – 2024 ஆம் ஆண்டு பயணம் தொடங்கும் போது ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் அழைத்து செல்லப்படுகின்றார்கள்.  “இந்த ஆன்மீக பயணம் என்பது யாருக்கும் போட்டி அல்ல. இது கடந்த ஆண்டு மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டம்”. அதன் பின்பு தான் காசி  தமிழ் சங்கம் உருவானது. அதனால் தமிழக அரசு அறிவித்த இந்த திட்டத்திற்கு போட்டியாக நடத்தப்பட்டது தான் காசி தமிழ் சங்கமம். மேலும் காசி ஆன்மீக பயணத் திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அரசின் அனுமதி மற்றும் மானியங்களை பற்றி தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்போம் என அவர் கூறியுள்ளார்.