திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ஆம் ஆண்டு ஆடிப்பூரவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. காலை சக்தி ஹோமத்துடன் அம்மனுக்கு மஞ்சள் குடம் சமர்ப்பணம், 9 மணிக்கு பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி அம்மன் தேர் இழுத்தல், பால்குட ஊர்வலம், பகல் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து இரண்டு மணிக்கு பக்தர்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கொதிக்கும் எண்ணெயில் கையால் எடுத்த 7 வடைகள் ஏலம் விடப்பட்டதில் திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதியினர் முதல் வடையை 4,700 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். 2-வது வடை 3,800- ரூபாய்க்கும், 3-வது மற்றும் 4-வது வடைகள் தலா 3700-ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 7 வடைகளும் 21,900 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு ஏலம் எடுத்த வடையை சாப்பிட்டு குழந்தை பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயம் வழங்கியுள்ளனர். இரவில் நாடகம், திருவீதி உலா நடைபெற்றது.