சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ஜுனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விரிவான அறிக்கையை தயாரிக்கும் படி அரசு கேட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை, நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும் நிறுவனம் இறுதி செய்யப்பட்ட பின் 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்படும். மதுரையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் 18 ரயில் நிலையங்களுடன் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைகிறது. இது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டமாகும். ரயில் நிலையங்களின் செலவுகள், வகை செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் போன்றவை குறித்த முழு விவரங்கள் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.