சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் காதலியைத் தவிர்த்த காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தன்பூர் பகுதியைச் சேர்ந்த காமதா என்ற வாலிபர், உஸ்லாப்பூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டு விடுதியில் தங்கி வந்துள்ளார்.
இவருக்கும் சீபத் பகுதியைச் சேர்ந்த ரோஷ்னி சூர்யவன்ஷி என்ற இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காமதா தனது காதலியின் அலைபேசி எண்ணைத் துண்டித்ததோடு அவரைத் தொடர்பு கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், செவ்வாய்க்கிழமை காலை காதலன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனின் மார்பில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு அறையில் சிந்தியிருந்த ரத்தக் கறைகளைத் துடைத்து அந்தப் பெண் தடையங்களை மறைக்க முயன்றுள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த சிவில் லைன் காவல்துறையினர், வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பியோட முயன்ற இளம்பெண்ணைக் கைது செய்த காவல்துறையினர், இந்த விபரீத கொலை குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
