தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெயராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த கிளீனரான கோகுல் என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் நிலக்கரி முழுவதும் சாலையில் கொட்டியது. இதனை பார்த்ததும் ஜெயராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கோகுலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கோகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.