பிரபல ஆவணப்பட டைரக்டர் லீனா மணிமேகலை தான் இயக்கிய “காளி” எனும் ஆவணப் படத்தின் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார். அப்போஸ்டரில் காளி வேடம் அணிந்த பெண் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இப்போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து கடவுளை அவமதிக்கும் அடிப்படையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.
லீனா மணிமேகலையின் மீதான புகாரின்படி டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் டைரக்டர் லீனாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படியும், அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டு விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் இவ்வழக்குகளுக்கு எதிராக லீனா சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அவற்றில், இந்த வழக்குகளால் தான் கைதுசெய்யக்கூடும் எனவும் தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. லீனாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு , அவருடைய மனு தொடர்பான வாதத்தை விளக்கமளிக்க மத்திய அரசு, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேச மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யவும் இடைக்கால தடை பிறப்பித்து உள்ளது.