புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி இந்திராநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சரவணன் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் படுகாயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.