சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மாணவியின் பின்னால் நின்ற 60 வயது முதியவர் ஒருவர், அவரது உடலில் தகாத முறையில் கை வைத்து மோசமாக நடந்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த மாணவி, தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி, அந்த முதியவரை சரமாரியாக தாக்கினார், இதனால் பேருந்தில் பயணித்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகள் பரவியது.

இதைத் தொடர்ந்து, மாணவி உடனடியாக ஓட்டுநரிடம் சென்று முறையிட்டதுடன், பேருந்தை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். பொதுமக்களின் உதவியுடன், அந்த முதியவரை மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முதியவரின் பெயர் மோகன் ( 60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.