தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை மதியம் பெண் மருத்துவர் ஒருவர் வெளிப்புற நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பிரிவில் 40 வயதை கடந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நபர் எதிர்ப்பாராத விதமாக மருத்துவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார். மேலும் அவரை தாக்கி உள்ளார். இதனை சிறிதும் எதிர்பாராத மருத்துவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார்.
அப்போது அவரது மேலாடை கிழிந்தது. அருகில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயற்சித்தனர். இடத்திலிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும், மருத்துவமனையின் நுழைவு வாயிலில் உள்ள காவலாளிகள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது தான் அந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
வேலையில் இருந்த பெண் மருத்துவரிடம் நோயாளி தவறாக நடந்த சம்பவம் மருத்துவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஜூடோ அமைப்பு மருத்துவருக்கு எதிரான செயல்களை கண்டித்து மருத்துவமனையின் முதல்வரிடம் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
சென்ற மாதம் இது போன்றே கொல்கத்தா அரசு பொது மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து இதுபோல மருத்துவர்களிடம் தகாதவாறு நடந்து கொள்வது போன்ற சட்டவிரோதமான செயல்கள் நடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.