கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 170 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்த திட்டம் நிறைவடைந்ததால் அதற்கான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்து வருகிறது. நகரில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்புகளை நவீன எந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் ஆள் இறங்கு குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியதால் அதனை சரி செய்ய ஊழியர் சென்றுள்ளார். அவர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மூடியை திறந்து பணிகளை செய்ய முயன்ற போது கழிவுநீர் நிரம்பியிருந்ததால் குழி இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் கால் தவறி அவர் குழிக்குள் விழுந்து உடனடியாக சுதாரித்துக் கொண்டு மேலே எழுந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய வரும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறை, காலுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியாமல் வருவதால் விஷவாயுத்தாக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வேலை பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.