
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி பாளையம் நான்கு வழி சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமான டென்டர்களை முறைகேடாக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகமாக பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்தார் என்பதுதான் புகார்.
இதன் மூலமாக 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு இருக்கின்றது, முறைகேடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் ஆர்.எஸ் பாரதி வழக்கின் சாராம்சம். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை என கூறி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றார்.
பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்றத்திலும் இந்த வழக்கு பந்தாடப்படுகிறது. கடைசியாக சென்னை உயர்நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று முடிவாகி, சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதியரசர் அனிருத்த போஸ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜர் ஆனார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகிறார். கபில்சிபில் ஆஜராவதற்கு அரியமா சுந்தரம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏனென்றால் இந்த வழக்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாக திமுக தலைவரின் சார்பாக கபில் சிபில் இந்த வழக்கில் ஆஜராகி கொண்டிருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக கபில் சிபில் ஆஜராகிறார். இதில் எங்கிருந்து நாம் நீதி எதிர்பார்க்க முடியும் ? என்ற ஒரு கேள்வியை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கபில்சிபில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு நான் ஆஜராவது பிடிக்கவில்லை என்றால் ? நான் வழக்கிலிருந்து விலகிக் கொள்கிறேன். அதனால் அவர்கள் ஏன் இந்த பேசுகின்றார்கள் ? என்பது பிரியவில்லை என கேள்வி எழுப்பினார்.
கடைசியாக பேசிய நீதிபதி, தற்போது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் ? இந்த வழக்கு என்ன என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது ? என கூறி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்திருக்கின்றார்கள்.