தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாப்பதற்கு கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தில் ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சை போன்ற மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலை நம்பியுள்ளனர்.

சர்வதேச எல்லைக்கோட்டினை தாண்டிச் செல்லும் நிகழ்வுகளால் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தாக்குதல் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்கும். எனவே கச்சதீவை இந்தியாவிற்கு மீண்டும் திரும்ப பெற வேண்டும். அப்போதுதான் பாக் வளைகுடா பகுதிகளில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மீட்டெடுக்கப்படும். மேலும் மீனவர்களின் உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.