சென்னையில் வேலை தேடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 வயது ஆண் குழந்தை ஆகிய மூவர், பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிக்கந்தர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரவ் குமார் (24). இவரது மனைவி முனித குமாரி (20). இவர்களுக்கு பிரம்மினி குமார் என்ற 2 வயது மகன் இருந்தான். முன்பு ஸ்ரீபெரும்புதூரில் காவலாளியாகப் பணியாற்றிய கௌரவ் குமார், வேலை இழந்ததால் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். மீண்டும் வேலை தேடி கடந்த 21-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சென்னை வந்த அவர், தனது நண்பர் கிருஷ்ண பிரசாத் என்பவரைச் சந்தித்துள்ளார்.

கிருஷ்ண பிரசாத்தின் ஆலோசனையின் பேரில், தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் காவலாளியாகப் பணியாற்றும் சிக்கந்தர் என்பவரைச் சந்தித்துள்ளனர். சிக்கந்தர், அவர்கள் தங்குவதற்கு பாலிடெக்னிக் வளாகத்தில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

கடந்த 24-ஆம் தேதி மதியம், சிக்கந்தர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, கௌரவ் குமாரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்தத் தம்பதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சிக்கந்தர் மற்றும் அவரது நண்பர்கள், அங்கிருந்த இரும்பு கம்பியால் கௌரவ் குமார் மற்றும் முனித குமாரியை கொடூரமாகத் தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அழுத 2 வயது குழந்தையையும் அந்த கும்பல் ஈவுக்கஇரக்கமின்றி கொலை செய்தது.

கொலையை மறைக்க திட்டமிட்ட கும்பல், மூவரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டியது.

கடந்த 25-ஆம் தேதி இந்திரா நகரில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை வைத்து அடையாறு உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் இளங்கனி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். கௌரவ் குமாரின் சட்டைப் பையில் இருந்த செக்யூரிட்டி நிறுவனத்தின் தொலைபேசி எண் துப்பு துலக்க உதவியது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கந்தர் மற்றும் அவரது நண்பர்களான நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கால்வாயில் இருந்து குழந்தையின் உடல் முன்னரே மீட்கப்பட்ட நிலையில், பெருங்குடி குப்பை மேட்டில் 75-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 3 நாட்களாகப் போராடி, இன்று முனித குமாரியின் உடலை மீட்டனர். தஞ்சம் புகுந்த இடத்திலேயே ஒரு குடும்பமே சிதைக்கப்பட்ட இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.