கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சந்தித்ததை போல…. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களும் சந்தித்துள்ளது.

சென்னையை சுற்றியுள்ள மாவட்ட மக்களை காத்ததை போல தூத்துக்குடி மற்றும் நெல்லையை சுற்றி இருக்கக்கூடிய மாவட்ட மக்களையும் தமிழ்நாடு அரசு காக்கும் என்ற உறுதியை நான் முதலில் அளிக்கிறேன். கடுமையான மழை பொழிவு 17 மற்றும் 18 தேதிகளில் ஏற்படும் என்பதை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் 17ஆம் தேதி அறிவித்தது.  வானிலை ஆராய்ச்சி மையம் சொன்ன பழைய மழை அளவுக்கு பல மடங்கு அதிகமாக மழை பொழிவு இருந்தது.

இதனால் இந்த மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. எடுத்துக்காட்டாக காயல்பட்டினத்தில் 94 சென்டிமீட்டர் மழை. அந்தப் பகுதியே வெள்ளகாடானது.  ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீத்ததெல்லாம்  நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஒரு சில இடங்களில் 1871 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. அதன் காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களின் பல வட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தாமிரபரணி ஆற்றிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,  ஸ்ரீவைகுண்டம், ஏரல்,   தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே  தாமதமாக கிடைத்தாலும்…..  அதில் அளித்துள்ள மழை அளவைவிட அதிகமாக மழை பொலிவு ஏற்பட்ட சூழலிலும் தமிழ்நாடு அரசு  முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது என தெரிவித்தார்.