ராஜஸ்தான் மாநிலம் பாட்மேரில் ஒரே ஒரு நாள் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை, மக்கள் கைகளால் எளிதில் பெயர்த்து எடுக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில், உள்ளூர் மக்கள் சிலர் சாலையின் விளிம்பில் உள்ள தார் கலவையை வெறும் கைகளால் சுரண்டுகின்றனர்.

 

அப்போது, அந்த சாலை, பர்பி மிட்டாய் போல துண்டுகளாக உடைந்து வருவதைக் காண முடிகிறது. இக்காட்சியைக் கண்ட பொதுமக்கள், சாலை அமைப்பதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரக்குறைவு மற்றும் மோசமான கட்டுமானத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு விரைவாக, வீட்டில் சுடும் ரொட்டி கூட உடையாது என்று மக்கள் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விடியோ வெளியானதையடுத்து, அப்பகுதி மக்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதே சாலை இவ்வளவு சீக்கிரம் உடைந்துபோகக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தார் கலவை சரியான விகிதத்தில் இல்லை, ரோலர் இயந்திரம் முறையாக இயக்கப்படவில்லை, வெறும் கணக்கு காட்டுவதற்காக மட்டுமே கட்டுமானப் பணி நடந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுவே, சாலை அமைக்கப்பட்ட ஒரே நாளில் உதிர்ந்து போவதற்குக் காரணமாகும். இத்தகைய அப்பட்டமான ஊழல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.