சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நபர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறையை காலி செய்தபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு ஊழியர்கள் உறைந்து போயுள்ளனர். இ-ஸ்போர்ட்ஸ் (eSports) எனப்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்ட அந்த நபர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை எனக் கூறப்படுகிறது.

அவர் காலி செய்த பிறகு அறையைச் சுத்தம் செய்யச் சென்ற ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறை முழுவதும் சுமார் 90 சென்டிமீட்டர் உயரத்திற்கு குப்பைகள் மலை போலக் குவிந்து கிடந்தன.

அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவறை காகிதங்கள் (Toilet Papers) காடு போலக் கிடந்தன.

குறிப்பாக, அந்த அறையில் இருந்த விலை உயர்ந்த கேமிங் கணினி மற்றும் நாற்காலிகள் குப்பைகளுக்கு நடுவே புதைந்து போயிருந்தன. பாத்ரூமில் இருந்த கழிவறை காகிதங்களின் குவியல், டாய்லெட்டை விட உயரமாக இருந்ததைக் கண்டு ஊழியர்கள் முகம் சுளித்தனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான அந்த நபர், ஹோட்டலுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் சரியாகச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த அருவருப்பான வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.