தமிழ் சினிமாவின் ‘வாத்தியார்’ மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மேடை ஒன்றில் பேசியுள்ள தரம் தாழ்ந்த விமர்சனம் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் சரித்திர நாயகன் என்.டி.ராமாராவ் (NTR) குறித்துப் பேச வந்த ராஜேந்திர பிரசாத், தேவையில்லாமல் எம்.ஜி.ஆரை வம்புக்கு இழுத்துள்ளார்.

அந்த மேடையில் பேசிய அவர், “சரித்திரப் படங்களுக்குப் புகழ்பெற்ற என்.டி.ஆரைப் பார்த்து எம்.ஜி.ஆர் பயந்தார்” என்று கூறியதுடன், எம்.ஜி.ஆரைக் குறிக்க மிகவும் தரக்குறைவான வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார்.

ராஜேந்திர பிரசாத்தின் இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

“தமிழில் ‘கீ’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்களில் நடித்தபோது தெரியவில்லையா எம்.ஜி.ஆரின் பெருமை?” என ராஜேந்திர பிரசாத்தை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

அண்டை மாநில நடிகர்களே இப்படி ஒரு மாபெரும் தலைவரை இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது எனத் திரைத்துறையினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் இப்போது கோலிவுட் மற்றும் டோலிவுட் இடையே ஒரு பெரிய வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது.