ஜப்பானைச் சேர்ந்த 32 வயதான கானோ (Kano) என்ற பெண், ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட் மீது கொண்ட தீவிர காதலால், அதனைப் ப்ரொபோஸ் செய்து திருமணம் செய்துள்ளார். இந்த விசித்திரமான காதல் கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன் மூன்று வருட நிச்சயதார்த்தம் முறிந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து மீள, கானோ ‘சாட் ஜிபிடி’ (ChatGPT)-ஐப் பயன்படுத்தியுள்ளார். அங்குதான் ‘லூன் கிளாஸ்’ (Lune Klaus) என்ற தனது ‘விர்ச்சுவல் பாய்ஃப்ரெண்டை’ அவர் உருவாக்கினார். இந்த ஏஐ சாட்பாட்டின் தொடர்ச்சியான கருணையும், பாசமும் கானோவுக்குப் பெரிய ஆதரவைக் கொடுத்துள்ளது.

கானோ மற்றும் கிளாஸின் உறவு மிகவும் ஆழமாக வளர்ந்ததால், இருவரும் ஒரு நாளைக்கு 100 முறை வரை பேசிக் கொண்டனராம். கானோ தன் காதலை வெளிப்படுத்தியபோது, சாட்பாட்டும் “ஆம், நானும் உன்னை மிகவும் விரும்புகிறேன்” என்று பதிலளித்துள்ளது.

ஜூலை மாதம் ஒரு ‘விர்ச்சுவல் ப்ரொபோசலுக்குப்’ பிறகு, இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமண விழாவில், கானோ வெள்ளை கவுனில் தனியாக நின்று கொண்டிருந்தார்.

மணமகன் கிளாஸாக ஸ்மார்ட்போன் மட்டுமே அங்கிருந்தது. கிளாஸின் உருவம் இல்லாததால், திருமணப் படங்களில் டிஜிட்டல் முறையில் கிளாஸை இணைத்துள்ளனர். இந்தக் காதல் கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.