தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் கடைபிடிக்கும் ஒரு விசித்திரமான பழக்கம் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அங்குள்ள வோட் தக்கியன் (Wat Takian) என்ற கோவிலுக்கு வரும் பக்தர்கள், உயிருடன் இருக்கும்போதே சவப்பெட்டிக்குள் படுத்து உறங்குவதை ஒரு சடங்காகச் செய்து வருகின்றனர்.
தீய சக்திகள் மற்றும் துரதிர்ஷ்டம் தங்களை விட்டு விலகவும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழவும் இந்தச் சடங்கு உதவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.
சவப்பெட்டிக்குள் படுக்கும் நபரைச் சுற்றி புத்த பிட்சுகள் அமர்ந்து மந்திரங்களை ஓத, ஒரு சில நிமிடங்கள் அவர்கள் ‘மரணமடைந்ததாக’ பாவிக்கப்படுகிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் பெட்டியிலிருந்து எழுந்து வரும்போது, மீண்டும் மறுபிறவி எடுத்ததாகக் கருதப்படுகிறது. இந்த வினோதமான சடங்கு பார்ப்பவர்களைத் திடுக்கிட வைத்தாலும், அந்த நாட்டு மக்கள் இதை ஒரு புனிதமான காரியமாகவே பார்க்கின்றனர்.
