உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவரே தனது 4 வயது மகனைத் தரையில் வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றும் அதேபோல் மது போதையில் வீடு திரும்பிய ராம்ஜி, தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் தாங்க முடியாமல், அருகில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் விகாஸை தூக்கித் தரையில் ஓங்கி வீசியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மகனைக் கொன்ற பிறகு ராம்ஜி அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொடூரத் தந்தை ராம்ஜியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மதுப் பழக்கத்தால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனது அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.