மணிப்பூரில் அதிகரித்து வரும் மிரட்டல் மற்றும் கட்டாயப் பணப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வரும் டிசம்பர் 28 முதல் பெட்ரோல் நிலையங்களை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆயுதம் ஏந்திய குழுக்களிடமிருந்து தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் சட்டவிரோதமான பணக் கோரிக்கைகள் காரணமாக, வணிகத்தை மேற்கொள்வது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டிசம்பர் 10 அன்று ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட போதிலும், அரசு தரப்பில் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இவர்களின் முக்கிய ஆதங்கமாக உள்ளது. பெட்ரோல் விலையானது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுவதால், மற்ற அத்தியாவசியப் பொருட்களைப் போல விலையை உயர்த்தி இத்தகைய சட்டவிரோதப் பணத் தேவைகளை ஈடுகட்ட முடியாது என்று விற்பனையாளர்கள் விளக்கியுள்ளனர்.
மேலும் ஒருபுறம் மிரட்டல்களுக்குப் பணிந்து பணம் கொடுத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சமும், மறுபுறம் பணம் கொடுக்க மறுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழலும் நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இந்த இக்கட்டான நிலையிலிருந்து தங்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து விற்பனை நிலையங்களும் காலவரையறையின்றி மூடப்படும் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
