ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பிஜோலியா வனப்பகுதியில் உள்ள சீதாமாதா குண்டு கோவிலுக்கருகே நடந்த ஒரு கொடூர சம்பவம் எல்லோரையும் பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 10–15 நாட்கள் வயதுடைய ஆண் குழந்தை, பாறைகளுக்கு நடுவில் வாயில் கல் திணிக்கப்பட்டது, அதற்கு மேல் ஃபெவிக்விக் ஒட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை அந்த இடத்தில் யாரோ ஒளித்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும், அவர் அருகே சென்று பார்த்தபோது, பாறைகளுக்கு நடுவில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை கண்டுள்ளார். உடனே கிராமத்தினரை கூவி அழைத்தார். பிறகு, போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை தற்போது பில்வாரா மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தையை பாதுகாப்பாக வைத்துப் பராமரிக்க அரசு சேவை இல்லத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
