புதுடெல்லியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் அல்லது நீக்கும் செயல்பாடுகளை ஆன்லைனில் செய்ய விரும்பும் அனைவரும் இனி கட்டாயமாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையம் புதியதாக அறிமுகப்படுத்திய இ-சைன் அம்சத்தின் மூலம், அந்த மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் ஒப்புதல் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களில் நேர்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யும் பணியில் தவறுகள் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் மற்றும் மாற்றும் பணிகளில் ஆன்லைன் முறையில் பாதுகாப்பு வழங்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் செயலியில் இந்த புதிய e-Sign வசதி தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி எந்தவொரு தவறான தகவலும் அல்லது போலி விண்ணப்பங்களும் இணையதளத்தில் பதிவாக வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
