உபி மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த ஒரு வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமே இல்லாமல் ஒரு கும்பல் வாலிபர் ஒருவரைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைக் கலங்க வைத்துள்ளது.

சந்தௌலி மாவட்டம் ஷஹாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை மருந்து வாங்கிவிட்டுத் தனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கேராய் கிராமம் அருகே வந்தபோது, ஏற்கனவே அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் அந்த இளைஞரைச் சூழ்ந்து கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் இருந்த தடிகளால் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த வாலிபர் ஓடியும், விடாமல் துரத்திச் சென்று அந்த கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இளைஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூரத் தாக்குதலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு ஷஹாப்கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கும்பலைத் தேடி வருகின்றனர்.