மதுரை மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக, முதலமைச்சரை ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று அழைத்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விஜய்யின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை உருவாக்கிய நிலையில், தி.மு.க. அமைச்சர் அன்பில் மகேஷ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ், விஜய்யின் விமர்சனங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். “கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோருடன் விஜய்யின் குடும்பம் நல்ல உறவில் இருந்தது. ஆனால், 50 ஆண்டு பொதுவாழ்வு அனுபவம் கொண்ட முதல்வரை இப்படி விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல.

த.வெ.க. தொண்டர்கள் முதிர்ச்சியுடன் இருக்கும்போது, விஜய் ‘விசிலடிச்சான் குஞ்சுகளாக’ மாறிவிட்டாரா? புதுக் கட்சி தொடங்கியதற்காகவே வசைபாடுவது சரியா?” எனக் கேள்வி எழுப்பினார். விஜய் இனி இது குறித்து சிந்தித்து பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.