சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற திமுக மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர், “மாநிலக் கல்விக் கொள்கையின் சாராம்சம் இருமொழிக் கொள்கை தான். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம், மற்றொரு மொழி என்று குறிப்பிடுகிறார்கள். அந்த மற்றொரு மொழி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு ஆறு மொழி தெரியும், ஆனால் என் தாய்மொழி எப்போதும் தமிழ் தான். தேவைக்கேற்ப நான் மற்ற மொழிகளை கற்றுக்கொண்டேன்” என்றார்.
அவர் மேலும், “போர் வந்தால் ஆங்கிலமே நமக்கு கேடயம் என்று கருணாநிதி சொன்னது உண்மை. ஆனால் பழைய நாள்காட்டியை தூக்கி எறிந்து விட்டு புதிய நாளை நாமே குறிக்க வேண்டும். நம் குறிக்கும் தேதியில் நல்லது நடந்தே தீரும். எனக்கு பிடித்த தூண் திருவள்ளுவர். அவர் பிடித்த தராசின் முள்ளாக நம் தலைவர்கள் அனைவரும் நிற்க வேண்டும். அவர்களுக்கு நான் அடிவருடுவதில் எந்த வெட்கமோ, கோபமோ இல்லை; அது என் கடமை” என வலியுறுத்தினார்.
அதோடு, “என்னை பலர் பல பெயர்களில் கூப்பிடுகிறார்கள். நான் எல்லா வேடத்தையும் போட்டிருக்கிறேன். எனக்கு நீ வேஷம் கட்ட வேண்டாம். சரித்திரம் வேறு, புராணம் வேறு என்று புரிந்தவன் நான். மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும். ஆங்கிலத்தில் ‘வில்’ என்றால் வழி உண்டு; அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதற்கு தோள் கொடுப்பதில் எனக்கு எந்த பயமும் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “எனக்கு மூன்று தாய்கள். என்னை பெற்ற தாய் இப்போது இல்லை. மீதமிருப்பது என் சினிமா தாயும், என் இந்திய தாயும் தான். இந்த இரண்டு தாய்களுக்காக என் இரண்டு தோள்களும் உண்டு. என்னை யாரும் இடது பக்கம் இழுத்து விட முடியாது; வலது பக்கம் இழுத்து விட முடியாது. என் பெயர் கமல்ஹாசன். நான் இந்த குளத்தில் தான் பூப்பேன்” என கமல்ஹாசன் உரையை நிறைவு செய்தார்.
