தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான நடிகர் சரத்குமார் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் அதிரடிப் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது, விஐபி கேலரியில் அமர்ந்திருந்த அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள வழக்கறிஞர் சரண்யா என்பவர், இன்று சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து அமைச்சர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (NDPS Act) உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அதிரடி புகார் மனுவை அளித்துள்ளார். ​ஏற்கனவே இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக அமைச்சர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இணைந்து கூட்டு வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்திருந்தனர்.

அதில், ஐபிஎல் போட்டியின் போது தங்களது குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை குழந்தை விழுங்க முடியாததால் அதைத் தூளாக்கிக் கொடுத்ததாகவும், அதைச் சிலர் தவறாகச் சித்தரித்து போதைப்பொருள் என வதந்தி பரப்புவதாகவும் வேதனை தெரிவித்திருந்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தை முன்வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலம் தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா கொடுத்துள்ள இந்த போதைப்பொருள் தடுப்புச் சட்டப் புகார் மனு, தவெக அரசுக்கும் அமைச்சர் சரத்குமார் தரப்பிற்கும் புதிய சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.