ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது முன்னாள் அதிபரும் படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்நாட்டிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மேலும் ஈரானின் நவீன ஜமரன் ரக போர்க்கப்பல் ஒன்றையும் அமெரிக்க ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இது குறித்து அமெரிக்க ஊடகத்திற்குப் பேட்டியளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரே நேரத்தில் ஈரானின் 48 முக்கியத் தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தங்களின் இந்த இமாலய வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை என்றும் மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான இந்த கூட்டுத் தாக்குதல்கள் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். முக்கியத் தலைவர்களின் அடுத்தடுத்த உயிரிழப்புகளால் ஈரானில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.
