அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஏவுகணைகள் மூலம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கு ஆசியாவில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.

தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானும் ஏவுகணைகளை வீசி வருகிறது. மூன்று நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள இந்த நேரடி மோதலால் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவி ஆயிஷா அங்குள்ள தற்போதைய நிலவரம் குறித்து வேதனையுடன் விவரித்துள்ளார்.

போர் காரணமாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் பயங்கர வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய தூதரகம் ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்திய போது பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் மீறிச் சென்றால் தேர்வில் தோல்வியடைய நேரிடும் என எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் வான்வழித் தடையால் வெளியேற முடியாமல் தவித்து வரும் தங்களுக்கு இந்திய தூதரகம் தொடர்ந்து உதவி வருவதாக அவர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.