கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி அதே நாளில் (29ஆம் தேதி) அதே இடத்தில் இன்று சென்னையை எதிர்கொள்கிறது..

2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி நிலைக்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில்  குவாலிபயர் 1ல் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது சென்னை அணி. இதையடுத்து எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணி லக்னோவை வீழ்த்தி குவாலிபயர் 2க்கு தகுதி பெற்றது. இதையடுத்து குவாலிபயர் 2ல் மும்பையை  வீழ்த்தி குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று 28ஆம் தேதி குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்று மழை வெளுத்து வாங்கியதன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இன்று இரவு 7:30 மணிக்கு அதே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை  வீழ்த்தி அறிமுகமான தொடரிலேயே சாம்பியன் ஆனது குஜராத் அணி.. இந்த சூழலில் 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 4  முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியுடன் இன்று மோதுகிறது குஜராத் அணி.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அதே நாளில்… அதே மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது. எனவே மீண்டும் வெற்றி பெற்று கோப்பையை 2வது முறை கைப்பற்ற குஜராத் அணி மல்லுகட்டும். அதேசமயம் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை சமநிலை செய்ய சென்னை அணியும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.. இன்று ஒருவேளை மழை மீண்டும் குறுக்கிட்டால் அவர்கள் குறைக்கப்பட்டு (5 ஓவர்) போட்டி நடத்தப்படும். இல்லையேல் சூப்பர் ஓவர் முறையில் நடத்தப்படும். ஒருவேளை போட்டி நடத்த முடியாமல் போனால் லீக் மேட்ச் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி பார்த்தால் குஜராத் அணி கோப்பையை வெல்லும்..