ஐபிஎல் 29வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

16வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும் விளையாடும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் லீக் 29-வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு) மற்றும் 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பத்திரனா ஆகியோர் சென்னை அணிக்கு வலுசேர்ப்பார்கள். இந்த மெதுவான ஆடுகளத்தில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

சென்னை அணி :

முதல் 3 ஆட்டங்களில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், கடைசி 2 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவர் தனது பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியம். முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி 226 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் மிகவும் பலவீனமாக இருந்தது. அந்த தவறை உடனே திருத்த வேண்டும்.

காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களில் விளையாடாமல் இருந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் உடற்தகுதி பெற்றுள்ளதால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இது கூடுதல் பலம் சேர்க்கும். கேப்டன் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களம் இறங்குவதால் ‘ரிஸ்க்’ எடுக்க தயாராக இருக்கிறார். சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் தோனி எப்போதும் போல் நல்ல நிலையில் இருக்கிறார். நாளை (இன்றைய) போட்டியில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

ஹைதராபாத் எப்படி இருக்கும்?

மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் லக்னோவிடம் தோல்வியடைந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் மயங்க் அகர்வால் (48 ரன்கள்), ஹென்ரிச் கிளாசன் (36 ரன்கள்), மார்க்ரம் (22 ரன்கள்) ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் பங்களித்தனர். ஹைதராபாத் 5 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்தை பொறுத்த வரையில் ஒழுங்கற்ற பேட்டிங் அணிக்கு பாதகமாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர், தமிழ்நாட்டின் பெரிதாகப் பேசப்படாத ஆல்ரவுண்டர், சொந்த ஊரில் ஜொலித்து, தனது அணிக்கு பலம் சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  மொத்தத்தில் 4-வது வெற்றியைப் பெறும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்குவதால், ஹைதராபாத் மீண்டும் வெற்றிப் பாதைக்கு வரும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13ல் சென்னையும், 5ல் ஐதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த அணிக்கு எதிரான 5 ஆட்டங்களில் சென்னை அணி 4ல் வென்று ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் சாத்தியமான லெவன் :

சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், திவான் கான்வே, ரஹானே, சிவம் துபே, அம்பதி ராயுடு, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்) துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா அல்லது பென் ஸ்டோக்ஸ், பத்திரனா.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி.நடராஜன்.